×

சட்டீஸ்கர் புதிய முதல்வராக பூபேஷ் பாகெல் தேர்வு: பேரவை குழு தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார்

ராய்பூர்: சட்டீஸ்கர் மாநிலத்தில் புதிய முதல்வராக பூபேஷ் பாகெல் தேர்வு செய்யப்பட்டுள்ளார். சட்டீஸ்கர் மாநிலத்தில் கடந்த மாதம் 12 மற்றும் 20ம் தேதிகளில் சட்டப்பேரவை தேர்தல் 2 கட்டங்களாக நடந்தது. இதன் முடிவுகள் கடந்த 11ம் தேதி வெளியாயின. மொத்தம் உள்ள 90 இடங்களில் காங்கிரஸ் கட்சி 68 இடங்களில் வெற்றி பெற்றது. கடந்த 15 ஆண்டுகளாக இங்கு ஆட்சியில் இருந்த பா.ஜ வெறும் 15 இடங்களிலேயே வெற்றி பெற்றது. சட்டீஸ்கரிலும் தேர்தலுக்கு முன்பே முதல்வர் வேட்பாளர் அறிவிக்கப்படாததால், முதல்வர் பதவிக்கு கடும் போட்டி நிலவியது. அங்குள்ள மூத்த தலைவர்கள் சிங் தியோ, தம்ரத்வாஜ் சாகு, பூபேஷ் பாகெல், சரண்தாஸ் மகந்த் ஆகியோர் போட்டியிட்டனர். யாரை முதல்வராக நியமிக்க வேண்டும் என சட்டீஸ்கர் காங்கிரஸ் தொண்டர்களிடம், காங்கிரஸ் தலைவர் ராகுல் ஆடியோ தகவல் அனுப்பி கருத்து கேட்டார். அதன்பின் சட்டீஸ்கர் மாநில காங்கிரஸ் மேற்பார்வையாளர் மல்லிகார்ஜூன கார்கே, பொறுப்பாளர் புனியோ, முதல்வர் பதவிக்கு போட்டி போட்ட 4 பேரிடமும்  டெல்லி துக்ளக் தெருவில் உள்ள வீட்டில் ராகுல் கடந்த 4 நாட்களாக ஆலோசனை நடத்தினார். அப்போது சோனியா, பிரியங்கா ஆகியோரும் உடனிருந்தனர். சட்டீஸ்கரில் காங்கிரஸ் 3ல் 2 பங்கு வெற்றி பெற்றதற்கு ஓபிசி பிரிவைச் சேர்ந்த மூத்த தலைவர் பூபேஷ் பாகெலின் வழிகாட்டுதல்தான் காரணம் என பெரும்பாலானோர் கூறினர். இதனடிப்படையில் சட்டீஸ்கர் புதிய முதல்வராக பூபேஷ் பாகெலை(57) நியமிக்க ராகுல் முடிவு செய்தார். சட்டீஸ்கர் தலைநகர் ராய்ப்பூரில் நேற்று நடந்த காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தில் முதல்வராக பூபேஷ் பாகெல் அறிவிக்கப்பட்டார். இவர் இன்று பதவி ஏற்கிறார்.

நக்சல்கள் தாக்குதலில் இருந்து தப்பியவர் சட்டீஸ்கர் புதிய முதல்வராக பொறுப்பேற்கும் பூபேஷ் பாகெல், பதன் சட்டப்பேரவை தொகுதியிலிருந்து எம்.எல்.ஏ வாக தேர்வு செய்யப்பட்டுள்ளார். விவசாய குடும்பத்தில் பிறந்த இவர், கடந்த 1985ம் ஆண்டு இளைஞர் காங்கிரசில் சேர்ந்தார். பின்னர் ம.பி. துர்க் மாவட்ட இளைஞர் காங்கிரஸ் தலைவரானார். கடந்த 1993ம் ஆண்டில் இவர் ம.பி எம்.எல்.ஏ ஆனார். 1994-95ம் ஆண்டில் மத்தியப் பிரதேச இளைஞர் காங்கிரசின் துணைத் தலைவரானார். கடந்த 1998ம் ஆண்டு ம..பியில் திக்விஜய்சிங் ஆட்சியில் இவர் இணை அமைச்சராக பொறுப்பேற்றார். 1999ல் போக்குவரத்து அமைச்சரானார். கடந்த 2000ம் ஆண்டில் சட்டீஸ்கர் உதயமானதும், இவர் சட்டீஸ்கர் எம்.எல்.ஏ ஆனார். பின்னர் சட்டீஸ்கர் மாநிலத்தில் முதல் வருவாய்த்துறை அமைச்சரானார். கடந்த 2003 முதல் 2008ம் ஆண்டு வரை சட்டீஸ்கர் மாநில எதிர்க்கட்சி தலைவராக இருந்தார். சட்டீஸ்கரின் சுக்மா மாவட்டத்தில் கடந்த 2013ம் ஆண்டு நடந்த காங்கிரஸ் கூட்டத்தில் கலந்து கொள்ள சென்ற தலைவர்களின் வாகனங்கள் மீது நக்சலைட்கள் தாக்குதல் நடத்தினார். இதில் சட்டீஸ்கர் காங்கிரஸ் தலைவராக இருந்த நந்தகுமார் படேல் மற்றும் மூத்த தலைவர்கள் வி.சி.சுக்லா உட்பட 27 பேர் பலியாயினர்.

 இதில் பூபேஷ் பாகெல் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். கடந்த 2014ம் ஆண்டு அக்டோபர் மாதம் முதல், இவர் சட்டீஸ்கர் மாநில காங்கிரஸ் தலைவராக உள்ளார். சட்டீஸ்கர் மூத்த அமைச்சர் ஒருவர் பற்றி போலி ஆபாச வீடியோ வெளியிட்டதாக பூபேஷ் பாகெல் மீது சிபிஐ வழக்குப்பதிவு செய்தது. இந்த வழக்கில் அவர் 14 நாள் நீதிமன்ற காவலில் வைக்கப்பட்டார். நில ஒதுக்கீடு வழக்கில் முறைகேடு நடந்ததாக குற்றம்சாட்டி, இவரது குடும்பத்தினர் மீது பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் வழக்குப் பதிவு செய்தனர். இது அரசியல் பழிவாங்கும் நடவடிக்கை என இவர் கூறினார். இவரது தீவிர முயற்சியால், சட்டீஸ்கரில் 15 ஆண்டு காலமாக ஆட்சியில் இருந்த பா.ஜ கட்சி தோற்கடிக்கப்பட்டு, காங்கிரஸ் கட்சி பீனிக்ஸ் பறவைபோல் மீண்டெழுந்துள்ளது. தற்போது அவர் சட்டீஸ்கர் மாநிலத்தின் 3வது முதல்வராக இன்று பொறுப்பேற்கிறார்.



பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Bhupesh Bhagal ,Chhattisgarh , Chhattisgarh , Chief Minister, Council , elected chairman
× RELATED சத்தீஸ்கரில் 12 மாவோயிஸ்ட்டுகள் சுட்டுக் கொலை